Friday, September 28, 2012

FIRST GRADUATE/முதல் பட்டதாரி

சென்னைப்  பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி .


                            1857 வருடம் இரண்டு யாழ்ப்பாண இளைஞர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில்  B.A தேர்வு எழுதினர் .அந்த இரண்டு இளைஞர்களும் தேர்வில் வெற்றிபெற்றதால் அதிக மதிப்பெண்கள் பெற்ற C.W.தாமோதரம்பிள்ளை அவர்கள் சென்னைப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியாக அறிவிக்கப்பெற்றார் .



                                                 இரண்டாவது பட்டதாரியான வைரமுத்து விசுவநாதப்பிள்ளையைப்பற்றி அதிகம் தெரியவில்லை .இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து  விசகணிதம் மற்றும் சுப்ரதீபம் போன்ற நூல்களை எழுதியதாகத்  தெரிகிறது .

முதல் பட்டதாரியான திரு .C.W.தாமோதரம்பிள்ளை  பற்றி  மேலும் ........



             திரு .பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பட்டி என்னும் 
கிராமத்தில் 1832ல் பிறந்தார் .அவர் தந்தையார் பெயர் வைரவநாதப்    பிள்ளை .தாயார் பெருந்தேவி அம்மாள் .     யாழ்ப்பாணத்தில் 1852ல் தனது பள்ளிப்படிப்பை முடித்து சிறிது 
காலம் ஆசிரியப்பணி ஆற்றினார் 1853 ல் தனது 20 வது வயதில் நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து தமிழ் அறிஞர்களின் மனதைக் கவர்ந்தார் .தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியானார் .1854ல் சென்னை வந்து தினவர்தமணி 
என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்து, 1857ல் தொடங்கிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி ஆனார் . சென்னை 
மாநிலக்கல்லுரி யில் தமிழ் விரிவுரையாளராகவும் பின்  கோழிக்கோடு கல்லூரியிலும்  பணியாற்றினார் .1871ல் B.Lபட்டம் பெற்று 1884ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் .ஓய்வுக்குப்பின் கும்பகோணத்தில் சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார் .கடைசியாக புதுக்கோட்டை முதன்மை வழக்காடு மன்றத்தில் நீதிபதியாக இருந்து சென்னை வந்தார் .

                                                       பரிதிமால்கலைஞரை அறிமுகம் செய்து அவரது திறமையினை உலகிற்கு தெரிவித்தவர் .தமிழ் இலக்கியங்களைப்
பதிப்பதில் உ .வே .சாமிநாதஅய்யருக்கு முன்னோடியாக இருந்தவர் .
1860ல் திருக்குறளைப் பதிப்பித்தார் .தொல்காப்பியத்தை நச்சினார்க்கினியன் உரையுடன் தொகுத்தார் .இறையனார் அகப்பொருளு க்கு  உரை எழுதினார் .வடமொழி தாக்கத்துடன் புத்தமித்ரர் எழுதிய வீரசோழியம் என்ற இலக்கண நூலை 1881ல் பதிப்பித்தார். அதே ஆண்டு கச்சியப்ப முனிவர் எழுதிய தனிகைப்புரானத்தை தொகுத்தார் .1887ல் கலித்தொகையை பதிப்பித்தார் .இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி ஆங்கில அரசு 1895ல் இவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளித்தது .இவர் சென்னை சுகுணவிலாஸ் சபாவின் ஆரம்பகால ஸ்தாபக உறுப்பினர் .மேலும் இவர் கட்டளைக் கலித்துறை ,சைவ மகத்துவம், சூளாமணி வசனம் மற்றும் நட்சத்திர மாலை போன்ற நூல்களையும் காந்த மலர் அல்லது கற்பின் மாட்சி என்கிற புதினத்தையும் எழுதி தனது செய்யுள் திறமையையும் உரைநடை வளத்தினையும் உலகிற்கு உணர்த்தினார் .தமிழ் தாத்தா உ .வே .சாமிநாத அய்யர் அவர்கள் சீவக சிந்தாமணியை பதிப்பிக்கும் போது தான் பதிப்பிப்பதிற்க்காக வைத்திருந்த   கைப்பிரதியைக் கொடுத்து உதவினார் .மேலும் தனக்கு தெரிந்த பேப்பர் வியாபாரியிடம் சொல்லி அய்யருக்குபொருளாதார ரீதியில் உதவச் சொன்னார் .

          இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல் இது .

                        நீடிய சீர்பெறு தமோதர மன்ன ,நீள்புவியில் 
                        வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புறநீ 
                       பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான் 
                       கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறவரிதே   

            பரிதி மால் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்த்ரி அவர்களின் பாராட்டுரை .

                       காமோதி வண்டர் கடிமலர்ந்தேன் கூட்டுதல்போ 
                       னாமோது செந்தமிழி னனூல் பலதொகுத்த 
                       தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றுவெவர் 
                       தாமோ தரமுடையார் தண்டமிழ்ச் செந்    நாப்புலவீர் 

          1896 ல் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் இயற்றிய லீலாவதி ,சுலோசனை நாடக நூல்களை வெளியிட்டபோது அவற்றிலிருந்து 
ஐம்பது பக்கங்களை சென்னைப் பல்கலைக் கழக  F.A தேர்வுக்கு   பாடமாக வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார் .
          இக்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றை பல்கலைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது இதுவே முதல் முறை என்று முதலியார் அவர்கள் 
'யான் கண்ட புலவர்கள் " என்னும் நூலில் குறிப்பிட்டுஉள்ளார்கள் .          

                                                      தமிழுக்குப்  பெரும் தொண்டு ஆற்றிய இந்த மகனார் 01-01-1901அன்று மறைந்தார் .ஆனால் அவர் தமிழுக்கு செய்த தொண்டு இப்பூவுலகில் சந்திரன் சூரியன் உள்ளவரை மறையாது .
                                                              



        

Wednesday, September 26, 2012

LOST TAMIL PROVERBS/மறைந்த தமிழ்ப் பழமொழிகள்

மறைந்த தமிழ்ப் பழமொழிகள்


                             சுருங்கச்சொல்லி  விளங்க வைப்பதுதான் பழமொழிகளின் சிறப்பு .ஆனால்  தற்பொழுது நிறையப் பேர்களுக்கு பழமொழிகளே தெரியவில்லை .தெரிந்தாலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் .எனது பெற்றோர்களுக்கு தெரிந்த பழமொழிகளில் 25 விழுக்காடு மட்டும் எனக்கு தெரியும் .எனது மக்களுக்கு 5விழுக்காடு மட்டும் தெரியும் என நினைக்கிறேன் .இந்தப் போக்கு தொடருமானால் பழமொழிகளே மறைந்து போகும் . அதன் உபயோகமும் மறைந்து போகும் .இதனால் வந்த உந்தலில் தான் இந்தத் தேடல் .

                                                     அ 

1.அன்பே கடவுள் 

2.அறிவே தெய்வம்

3.அடக்கமுடையார் அறிஞர்  அடங்காதர் கல்லார்

4.அகங்கையில் போட்டு புறங்கையை நக்கலாமா

5.அகப்பட்டுக்கொள்வேன் என்றா திருடன் திருடுகிறான்

6.அகட விகடமாய் பேசுவான்

7.அகதி /ஏழை சொல் அம்பலம் ஏறாது

8.அகதிக்கு ஆகாயம் /தெய்வமே துணை

9.அகதி தலையில் பொழுது விடியும்

10.அகதி பெறுவது பெண்பிள்ளை அதுவும் வெள்ளி பூராடம்

11.அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே

12.அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால்  அடிப்பந்தியில் இருந்தால் என்ன

கடைப்பந்த்யில் இருந்தால் என்ன .

13.அகல இருந்தால்  நீள உறவு

14.கிட்ட இருந்தால் முட்ட பகை

15.அகல இருந்தால் பகையும் உறவாகும்

16.அகம் மலிந்தால்  எல்லாம் மலியும் அகம் குறைந்தால் எல்லாம் குறையும்

17.அகல் வட்டம் பகல் மழை

18.அகோர தபசி  விபரீத சோரன்

19.அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம் /கைலாசம்

20.அக்காள் இருக்கிறவரைக்கும் மச்சான் உறவு

 21.    அக்காள் உறவும் மச்சான் பகையுமா

22.அகவிலை அறியாதவன்  துக்கம் அறியான்

23.அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய்க்கு வேதம் தெரியுமா

24.அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு விரும்பினதுபோல

25. அக்கிரகாரத்துக்கு ஒரு ஆடு வந்தால் ஆளுக்கு ஒரு மயிர்

26.அக்கினி மலை மேல் கற்பூர பாணம் பிரயோகித்தது போல

27.நெருப்புக்கு மயிர்ப்பாலம் கட்டியது போல

28.அக்கினி தேவனுக்கு அபிசேகம் செய்தது போல இருக்கிறான்

29.அக்கினியால் சுட்ட புண் விசமிக்காது

30.அக்கு தொக்கு இல்லாதவனுக்கு துக்கம் என்ன

31.அங்காடிக்காரியை சங்கீதம் பாடச் சொன்ன மாதிரி

32.அங்கிடு தொப்பிக்கு அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு சொட்டு

33.அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டன் தும்படிப்பட்டன்

34.அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோத்துக்கு பங்கும் இருப்பான்

35.அசல் வாழ்ந்தால் ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்

36.அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா

37.அசாவப்பயிரும் கண்டதே உறவும் விளையாது

38.அசைந்து தின்னும் ஆனை/ /மாடு அசையாம தின்னும் வீடு


39.அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்

40.அச்சானி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

41.அச்சிக்கிப்போனாலும் அகப்பை அரைக்காசு தான்

42.அச்சியிலும் பிச்சைக்காரன் உண்டு

43.அஞ்சலி வந்தனம் ஆருக்கும் நன்மை

44.அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்

45.ஐந்தாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது

46.அஞ்சினவனை குஞ்சும் வெரட்டும்

47.அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா ?

48.அஞ்சினாரைக் கெஞ்சவைக்கும்  அடித்தாரை வாழவைக்கும்

49.அஞ்சுகாசுக்கு குதிரை வேண்டும் .அதுவும் ஆற்றைக் கடக்க பாயவும் வேண்டும்

50.அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போலவே இருக்கிறது

51.அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் கறி சமைப்பாள்

52.அடக்கமுடையவர் அறிஞர்.அடங்காதார் கல்லார் .

53.அடக்குவார் அற்ற கழுக்கானியும் கொட்டுவார் அற்ற மேளமுமாய்த் திரிகிறான்

54.அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி .

55.அடங்காத பொண்டாட்டியாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு .

56.அடங்கின பிடி பிடிக்கவேண்டும் அடங்காத பிடி பிடிக்கலாகாது .

57.அடம்பங்க்கொடியும் திரண்டால் மிடுக்கு .

58.அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகக்கூடாது .

59.அடி நொச்சி நுனி ஆமணக்கா ?

60.அடி நாக்கு நஞ்சு நுனி நாக்கு தேன் .

61.அடியும் பட்டு புளித்த மாங்காய் திங்கணுமா ?

62.காசு கொடுத்து அந்தப் பீயை வங்கித் திங்கணுமா ?

63.அடுக்குகிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்க்கு

64.அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி .

65.அடிக்க அடிக்க பந்து விசை கொள்ளும் .

66.அடிவானம் கறுத்தால் ஆண்டை வீடு வறுக்கும் .

67.அடி அதிரசம் குத்து கொழுக்கட்டை .

68.அடா என்பான் வெளியே புறப்படான் .

69.அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா ?

70.குண்டு சட்டியிலே குதிரை ஓட்டலாமா ?

71.அண்ணாமலையார் அருளுன்டால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா ?

72.அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை
   
     ஆண்டிச் சிக்கு எழுபத்து நாலு பூசை

73.அதிக ஆசை அஷ்ட தரித்திரம்

74.அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால் விடியும் வரை திருடலாம் .

75.அதிகாரி வீட்டில் திருடி தலையாரி வீட்டில் வைத்தது போல்

76.அதிகாரி வீட்டு கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்

77.அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும்

78.அதிர அடித்தால் உதிர விளையும்

79.அடுத்த கூரை வேயுங்கால் தன் கூரைக்கும் மோசம் .

80.அடுத்து அடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்

81.அடுத்துக் கெடுப்பான் கபடன் .தொடுத்துக் கெடுப்பாள் வேசி .

82.அடுப்பருகில் வெண்ணெய் வைத்த கதையாய்

83.அஷ்டமத்து சனியை வட்டிக்கு வாங்கினால் போல்

85.எருக்களையை வெட்டி எட்டு எடத்தில் நட்டாலும் மல்லிப்பூ பூக்காது .

86.அட்டையை பிடித்து மெத்தையில் வைத்தாலும்

87.அட்டைக்கும் திருப்தியில்லை அக்கினிக்கும் திருப்தியில்லை

88.அணில் பிள்ளைக்கு நொங்குக்கு பஞ்சமில்லை

    அய்யப் பிள்ளைக்கு சோத்துக்கு பஞ்சமில்லை

89.அண்டை வீட்டு சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி

90.அணில் ஏற விட்ட நாய் பார்ப்பது போல்

91.அண்டை வீட்டு பார்ப்பான் சண்டை மூட்டி தீர்ப்பான்

92.அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராசாவுக்கு அபகீர்த்தி வந்தது போல

93.அண்ணாவியார் விழுந்தாலும் அடவு முறை

94.அண்ணாவி பிள்ளைக்கு பணம் பஞ்சமா
     அம்பட்டன் பிள்ளைக்கு மயிர்    பஞ்சமா

95.அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்

96.அண்ணனுக்கு பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்

97.அதிலேகுறைச்சல் இல்லை ஆட்டட் டா பூசாரி

98.அது அதுக்கு ஒரு கவலை அய்யாவுக்கு எட்டு கவலை

99.அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்

100.அதை விட்டால் கதியில்லை அப்புறம் போனாலும் வழிஇல்லை

101.அத்தனையும் நேர்ந்தாள் உப்பிட மறந்தாள்

102.அத்தான் செத்தான் மயிராச்சு கம்பளி மெத்தை நமக்காச்சு

103.அத்திப்பூவை ஆர் அறியார்

104.அத்திப்பூவை கண்டவர்கள் உண்டா
       ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா

105.அத்திமரத்தில் தொத்திய கனி போல

106.அத்து மீறிப் போனான் பித்துக்கொள்ளி ஆனான்

107.அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கலாமா

108.அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல்

109.அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்

110.அப்புச்சி குதம்பையைச் சூப்ப பிள்ளை முத்தின தேங்காய்க்கு
      அழுததாம்

111.அப்பத்தை எப்படி சுட்டீர்கள் ?தித்திப்பை எப்படி நுழைத்தீர்கள் ?

112.அப்புச்சி கோவணத்தை பருந்து கொண்டு ஓடுது
       பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது

113.அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்
       உப்பின் அருமை உப்பை ச்  சேர்த்தால் தெரியும்

114.அப்பன் சோற்றுக்கு  அழுகிறான் பிள்ளை
      கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்

115.அப்பன் பெரியவன் ,சித்தப்பா சுருட்டுக்கு நெருப்பு கொண்டுவா
       என்பது போல்

116.அமஞ்சி உண்டோ குப்பு நாயக்கரே என்பானே

117.அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்
       சமர்த்தனுக்கும் காணி  வேண்டாம்

118.அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி

119.அமாவாசைச் சோறு தினமும் கிடைக்காது

120.அம்பட்டக் கிருதும் வண்ணார ஒயிலும் போல

121.அம்பட்டன் குப்பையை கிளறினால் மயிர் மயிரா வரும்

122.அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்கானியா

123.அம்பலக்ககழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன
      அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன

124.அம்பலத்தில் கட்டுச் சோற்றைப் பிரித்தால் போல

125.அம்பலத்தில் பொதி அவில்க்கல் ஆகாது

125.அம்பலத்தில் ஏறும் பேச்சை அசமடக்கம் பண்ணப் பார்க்கிறான்

126.அம்பானி (அம்பு +ஆனி )தைத்தது போல் பேசுகிறான்

127.அம்மணமும் இன்னலும் ஆயிசு பரியந்தமா

128.அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு நரிவால் கொள்வார்களா ?

129.அம்மான் மகளுக்கு முறையா ?

130.அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு அடிமை

131.அம்மான் வீட்டு வெள்ளாட்டை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா

132.செக்கு மாடு கூப்பிட்டா செனமாட்டுக்கு எங்கே போச்சு புத்தி

133.செட்டி மிடுக்கா சரக்கு மிடுக்கா

134.அம்மி மிடுக்கா அரைப்பவள் மிடுக்கா

135.அம்மியிருந்து அரசனை அளிப்பாள்

136.அம்மை நூக்கிற நூலுக்கும் பேரன் கட்டுகிற அரைஞான் கயிற்றுக்கும் சரி

137.அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணை கிடைக்குமா

138.அம்மையார் பெறுகிறது அரைக்காசு தலை சிரைக்கிறது முக்காக்காசு

139.அம்மையார் எப்போது சாவாள் ?கம்பளி எப்ப கிடைக்கும்

140.அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு

141.அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது

142.அயோக்கியர் அழகு அபரஞ்சி சிமிழில் நஞ்சு

143.அயலார் உடைமைக்குப் பேயாய் பறக்கிறாள்

144.அம்மையார்க்கு என்ன துக்கம் கந்தைத் துக்கம்

145.ஹர ஹர என்பது பெரிதோ ஆண்டிக்கு இடுவது பெரிதோ

146.அரங்கின்றி வட்டாடலும் நூலறிவின்றி பேசுவதும் ஒன்று

147.அய்யவையர் கூழுக்கு அப்பயங்கார் தாதாவா

148.அரசன் இல்லாத நாடு புருசன் இல்லாத வீடு

149.அரசன் அளவிற்கு ஏறிற்று

150.அரசன் உடமைக்கு ஆகாயம் சாட்சி

151.அரசனும் அரவும் சரி

152.அரசனும் அழலும் சரி

153.அரசனும் பாம்பும் நெருப்பும் சரி

154.அரசனுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்

155.அரத்தை அரம் அறுக்கும் வயிரத்தை வயிரம் அறுக்கும்

156.அரபிக்குதிரையிலும் ஐயம்பேட்டை தட்டுவாணி நல்லது

157.அரவத்தைக்கண்டால் கீரி விடுமா

158.அரி என்றால் ஆண்டிக்கு கோபம் அர என்றால் தாதனுக்கு கோபம்

159.அரிசி அள்ளின காக்காய் போல்

160.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்

161.அரிசி உண்டானால் வரிசை உண்டு

162.அக்காள் உண்டானால் மச்சான் உண்டு

163.அரிசி கொண்டு உண்ண அக்கா வீட்டுக்குப் போவானேன்

164.அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை

        உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை

165.அரிசி மறந்த உலைக்கு உப்பு எதற்கு

166.அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீடு

167.அரிவாளும் அசைய வேண்டும்
      ஆண்டை குடியும் கெட வேண்டும்

168.அரிவாள் சுருக்கே அரிவாள் முனை கருக்கே

169.அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்

170.அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வவ்வால் சேராது

171.அருக்காணிமுத்துக் கரிக்கோலமானாள்

172. அருக்காமணியா முருக்கம் பூவா

173.அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளை பெற்றாலாம்

174.அருட்செல்வம் ஆருக்கும் உண்டு.
      பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை

175.அருணாம்பரமே கருணாம்பரம்

176.அருமை அறியாதவன் ஆண்டு என்ன மாண்டு என்ன

177.அருமை மருமகன் தலை போனாலும் போகட்டும்
      ஆதிகாலத்து உரல் போகக் கூடாது

178.அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது

179.அரும்சுனை நீர் உண்டால் அப்போதே ரோகம்

180.அருள் வேணும் பொருள் வேணும் அடக்கம் வேணும்

181.அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் கிடைக்காது

182.அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையை கடந்தது போல

183.அரைக்கினும் சந்தனம்   குணம் மாறாது

184.அரைச்சொல் கொண்டு அம்பலம் ஏறலாமா

185.அரைத்து மீந்தது அம்மி சிரைத்து மீந்தது குடுமி

186.அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி ஒரு பணம் கொடுத்து
      ஓயச்சொல்வானேன்

187.அரைப்பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா

188.அரைப்பணம் கொடுக்கப்பால்மாறி ஐம்பது பொன் கொடுத்து
      சேர்வை செய்த கதை

189.அரையில் புண்ணும் அண்டை வீட்டுக் கடனும் ஆகாது

190.அலுத்துப் பிலுத்து  அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து
     மச்சானிடத்து ப் போட்டாளாம்

191.அலை எப்போது ஓயும் தலை எப்போது முழுகிகிறது

192.அலை மோதும் போதே தலை முழுக வேண்டும்

193.அலைவாய்த் துரும்பு போல

194.அல்லக்கட்டு நரி பல்லைக்காட்டுகிறது

195.அல்லவை தேய அறம் பெருகும்

196.அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு

197.அல்லல் அருளாள்வார்க்கில்லை

198.அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்

199.அல்லாதவன் வாயில் கள்ளை வார்

200.அல்லாத வழியில் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் ஆகா

201.அல்லும் பகலும் அழுக்கறக் கல்

202.அவகடம் உள்ளவன் அருமை அறியான்

203.அவகுணக்காரன் ஆகாசமாவான்

204.அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது

205.அவசாரி போகவும் ஆசை அடிப்பான் என்றும் பயம்

206.அவசாரிக்கு வாய் பெரிசு அஞ்சாறு அரிசிக்கு கொதி பெரிசு

207.அவசாரிக்கு ஆணை இல்லை
      திருடிக்கு தெய்வம் இல்லை

208.அவசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேணும்
      திருடப்போனாலும் திறமை வேண்டும்

209.அவசாரி என்று ஆனை மேல் ஏறலாம்
      திருடி என்று தெருவில் வரலாமா

210.அவ தந்திரம் தனக்கு அந்தரம்

211.அவதிக்குடிக்கு தெய்வமே துணை

212.அவப் பொழுதிலும் தவப் பொழுது நல்லது

213.அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்

214.அவலட்சணம் உள்ள குதிரைக்கு சுழி சுத்தம் பார்ப்பதில்லை

215.அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்

216.அவனுக்கு கத்தியுமில்லை கப்படாவும் இல்லை

217.அவனுக்கும் இவனுக்கும் எருமை சங்காத்தம்

218.அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச் சொல்லும்

219.அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்தது போல் இருக்கிறது

220.அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது

221.அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்

222.அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி ,ஆமையை மல்லாத்துகிறாப்
       போல் மல்லாத்திப் போட்டான்

223.அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி

224.அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது

225.அவன் மிதித்த இடம் பற்றி எரியும்

226.அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன்

227.அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்

228.அவன் வல்லாள கண்டனை வாரிப்போரிட்டவன்

229.அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்

230.அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்

231.அவன் கொஞ்சப்புள்ளியா

232.அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா

233.அவித்த பயறு முளைத்த கதை போல

234.அவிவேகி உறவிலும் ,விவேகி பகையே நன்று

235.அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும்
     பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்

236.அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ

237.அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை

238.அழகிற்காக மூக்கை அறுப்பார்களா

239.அழகு இருந்து அழும் ,அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்

240.அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறான்டி கூத்தாடி

241.அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்

242.அழச்சொல்லுகிறவர் தமர் சிரிக்கச் சொல்லுகிறவர் பிறர்

243.அழிக்கப் படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்

244.அழிந்தவள் ஆரோடு போனால் என்ன

245.அழிந்த நந்தவனத்தில் ஆடு மேய்ந்தென்ன கழுதை மேய்ந்தென்ன

246.அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்

247.அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர்

248.அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது

249அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம் ,ஒழுகிற வீட்டில்

       இருக்கலாகாது

250.அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்

251.அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்

252.அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது

253.அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான் இளகின நெஞ்சன் எவர்க்கும்
        உதவுவான்

254.அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்

255.அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன்பெண்டீர்க்கு அழுவாரில்லை

256.அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு

257.அளகாபுரி கொள்ளையானாலும் ,அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை

258.அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்

259.அளக்கிற நாழி அகவிலை அறியுமா

260.அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டி காணாது

261.அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி
       நீர் நிறைந்தற்று

262.அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது

263.அள்ளிக் கொடுத்தால் சும்மா ,அளந்து கொடுத்தால் கடன்

264.அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது

265.கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் இருக்கலாம்
      அள்ளுகிறவன் இடத்தில்  இருக்கக் கூடாது

266.அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்

267.அறக்காத்தான் பெண்டிழந்தான் ஆறுகாதவழி சுமந்து அழுதான்

268அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள் .

269.அறக்கூர்மை முழுமொட்டை

270.அறச் செட்டு முழு நஷ்டம்

271.அறணை  அலகு திறவாது

272.அறநனைந்தவருக்குக் கூதல் என்ன

273.அறப்பேசி உறவாட வேண்டும்

274.அறப்படித்தவர் அங்காடி போனால் விற்கவும் மாட்டார் கொள்ளவு    

       மாட்டார்

275.அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்

276.அறப்பத்தினி ஆம்பிடையானை அப்பா என்று அழைத்த கதை

277.அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல்

278.அறமுறுக்கினால் அற்றுப் போகும்

279.அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும்

280.அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழுந்தது போல்

281.அறிந்த ஆண்டையென்று கும்பிடப்போனால் ,உங்கப்பன் பத்துப்பணம்
      கொடுக்கவேண்டும் கொடு என்றான்

282.அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா

283.அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண்ணாயிற்று

284.அறிந்தவனென்று கும்பிட அடிமை வழக்கிட்ட கதை போல

285.அறிய அறியக் கெடுவார் உண்டோ

286.அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்

287.அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா

288.அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே

289.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்

290.அறிவு ஆர் அறிவார் ?ஆய்ந்தார் அறிவார்

291.அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்திலும் தாழ்வுபடுவான்

292.அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை

293.அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்

294.அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை

295.அறிவு புறம் போய் உலண்டது போல

296.அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்

297.அறிவு மனதை அரிக்கும்

298.அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்

299.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்

300.அறிவுடையாரை அடுத்தாற் போதும்

301.அறிவேன் அறிவேன் ஆலிலை புளியிலை போல் இருக்கும்

302.அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்

303அறுதலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை

304.அறுத்தவள் ஆண் பிள்ளை பெற்ற கதை

305.அறுபது நாளைக்கு எழுபது கந்தை

306.அறுபத்துநாலு அடிக்கம்பத்தின் மேல் ஆடினாலும் கீழே வந்து தான்
       பரிசு வங்க வேண்டும்

307.அறுபத்தெட்டுக் கோரம்பலம்

308.அறுப்புக்காலத்தில் எலிக்கும் ஐந்து பெஞ்சாதி

309.அறுவாய்க்கு வாய் பெரிது அரிசிக்குக் கொதி பெரிது

310.அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும்

311.அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன்

312.அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்

313.அற்பத்திற்கு அழகு குலைகிறதா

314.அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும்

315.அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்

316.அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்

317.அற்றத்துக்கு உற்ற தாய்

318.அனல் குளிர் வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்திற்குள்
      அடக்கம்

319.அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்

320.அன்பற்ற மாமியாருக்கு கும்பிடும் குற்றந்தான்

321.அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே

322.அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி

323.அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை

324.அன்புள்ள குணம் அலையில்லா நதி

325.அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும்

326.அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன்
       வந்து அழைத்த கதை

327.அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்

328.அன்றற ஆயிரம் பொன்னிலும் ,நின்றற ஒரு காசு பெரிது

329 அன்றிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது

330.அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை

331அன்றும் இல்லைத் தையல் ,இன்றும் இல்லைப் பொத்தல்

332.அன்று கொள்,நின்று கொள் ,என்றும் கொள்ளாதே

333.அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா ?

334.அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற
     களாக்காய் பெரிது

335.அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது

336.அன்ன மயம் பிராண மயம்

337.அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்

338.அன்ன மயம் இன்றிப் பின்னை மயம் இல்லை

339.அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாமா ?

340.அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்

341.அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு

342.அன்ன நடை நடக்கப் போய்த்  தன் நடையும் கெட்டாற்போல

343.அன்னப் பாலுக்கு சிங்கியடித்தவள் ஆவின் பாலுக்கு சர்க்கரை தேடுகிறாள்

344.அன்னதானத்திற்கு சரி என்ன தானம் இருக்கிறது ?

345.அன்னைக்கு உதவாதான் யாருக்கு உதவுவான் ?

346.அந்நிய மாதர் அவதிக்கு உதவார்

347.அஸ்திமசகாந்தரம் என்பது போல்

348.அறுபத்தெட்டுக்  கோரம்பலம்

349.அஸ்த செவ்வானம் அடை மழைக்கு லட்சனம்

350.அன்று தின்ன  சோறு ஆறு மாசத்திற்கு வருமா

                                                   ஆ  




1..ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான் .

2.ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால் ,அண்டை வீட்டுக்காரனை என்ன
   செய்யும்

3.ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்

4.ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்

5.ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்

6.ஆகாத்தியக்கரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சியா ?

7.ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல

8.ஆகாயத்தைப் பருந்து   எ டுத்துக்கொண்டு   போகுமா ?

9.ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன் ,என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால்
   விடு என்கிறான் குரு .

10.ஆகிறகாலத்தில் அவிழ்தம் பலிக்கும்

11.ஆகும்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்

12.ஆகுங்காய் பிஞ்சிலே தெரியும்

13.ஆகாயம் பெற்றது ,பூமி தாங்கினது

14.ஆகாயத்தை அளக்கும் இரும்புத்தூனை செல்லரிக்குமா ?

15.ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா

16.ஆகாய வல்லிடி அதிர இடிக்கும்

17.ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா ?
     
.18.ஆகுங்காலம் ஆகும் ,போகுங்காலம் போகும்

19.ஆக்கிக் குழைப்பேன் ,அரிசியாய் இறக்குவேன்

20.ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்

21.ஆக்குகிறவள் சலித்தால் அடுப்பு பாழ் ,குத்துகிறவள் சலித்தால் குந்தாணி      
    .பாழ்

22.ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாவுங்காலம் சங்கரா சங்கரா    

       என்கிறாள்

23.ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை

24.ஆதரித்த தெய்வம் எல்லாம் அடியோட மாண்டது

25.ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் ,தொண்ணுறு நாள்
     போனால் துடைப்பக்கட்டை.

26.ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேன்

27.ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே

29.ஆசை அண்டாதாகில் ,அழுகையும் அண்டாது

30.ஆசை உண்டானால் பூஜை உண்டு

31.ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு

32.ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை

33.ஆசைக்கு அளவில்லை

34.ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?

35.ஆசை பெருக அலைச்சலும் பெருகும்

36.ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?

37.ஆசை பெரிதோ ,மலை பெரிதோ ?

38.ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே

39.ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று

40.ஆட விட்டு நாடகம் பார்க்கிறதா ?

41.ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்

42.ஆசை வைத்தால் நாசம்

43.ஆடப் பாடத் தெரியாது இரண்டு பங்கு உண்டு

44.ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே

45.ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சு

46.ஆடா ஜாதி கூடா ஜாதியா ?

47.ஆடி ஓய்ந்த பம்பரம்

48.ஆடி அறவெட்டை அகவிலை நெல்விலை

49.ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்

50.ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்துபோம் .

51.ஆடிக்காற்றில் உதிரும் சருகு போல

52..ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தது போல

53.ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி

54.ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும் ,பாடிக்கறக்கிற மாட்டை ப்
     பாடிக்கறக்க வேண்டும்

55.ஆடிக்காற்றில் எச்சிற்கலைக்கு வழியா ?

56ஆடிமாசத்தில் குத்தின குத்துக்கு ஆவணிமாசத்தில் வலி எடுத்ததாம்

57.ஆடு கால்பணம் வால் முக்கால் பணம்

58.ஆடு எடுத்த கள்ளனைப் போல் விழிக்கிறான்

59.ஆடு இருக்க இடையனை விழுங்குமா ?

60.ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப்  பதுங்குகிறான்

61.ஆடிய காலும் பாடிய மிடறும்

62.ஆடிப் பட்டம் தேடி விதை

63.ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது

64.ஆடு கிடந்த இடத்தில் பழுத்த தழையும் கிடைக்காது

65.ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா ?

66.ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா ?

67.ஆடு அடைச்ச எடத்தில் மயிரும் கிடைக்கில்லை

68.ஆடு கொழுக்கிறதெல்லாம் இடையனுக்கு லாபம்

69.ஆடு கொண்டவன் ஆடித்திரிவான் ,கோழி கொண்டவன் கூவித் திரிவான்

70.ஆடுங்காலம் தலை கீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்

71.ஆடுஉ தவுமோ அய்யரே என்றால் ,கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும்
     ஆகும் என்கிறார் .

72.ஆடு தழை தின்பது போல

73.ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம்

74.ஆடுங்காலத்து தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன்
     ஆவான் .

75.ஆடு நினைச்ச இடத்தில் பட்டி போடமுடியுமா ?

76.ஆடையைத் தின்றால் வெண்ணெய் கிடைக்குமா ?

77.ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்

78.ஆட்டாளுக்கு ஒரு  மோட்டாள்

79.ஆட்காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனோ ,அவன்

    அறியாமல் அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ ?

80.ஆட்டில் ஆயிரம் ,மாட்டில் ஆயிரம் ,வீட்டிலே கரண்டி பால் இல்லை

81.ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு ,ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு

82.ஆட்டுத்தலைக்கு வண்ணான் பறக்கிறது போல

83.ஆட்டுக்கிடையே ஓநாய் புகுந்தது போல்

84.ஆட்டு வெண்ணை ஆட்டு மூளைக்கும் காணாது

85.ஆட்டுக்கு தோற்குமா கிழப்புலி

86.ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கிறது

87.ஆட்டுக்கும் மாட்டுக்கும் முறையா ,காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா ?

88.ஆட்டுக்கு தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது

89.ஆட்டுக்குட்டி மேல் ஆயிரம் பொன்னா ?

90.ஆட்டுவித்து பம்பை கொட்டுகிறான்

91.ஆட்டுக்குட்டிக்கு ஆனையை காவு கொடுப்பதா ?

92.ஆட்டைக்காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்

93.ஆட்டுக்குட்டியை தோளிலே வைத்துக்கொண்டு காடெல்லாம் தேடின

     இடையன் போல

94.ஆணை அடித்து வளர் ,பெண்ணைப் போற்றி வளர்

95.ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை

97.ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப் பார்க்க ,வீட்டைக் கட்டி

      நெருப்பு வைப்பது நல்லது

98.ஆணமும் கறியும்  அடுக்கோடே வேண்டும்

99.ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்கு பிழைகேடு செய்யலாகாது

100.ஆட்டைகொருமுறை காணச் சேரட்டை இல்லையோ

   










     




                                                                                                                                    தொடரும்