Friday, September 28, 2012

FIRST GRADUATE/முதல் பட்டதாரி

சென்னைப்  பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி .


                            1857 வருடம் இரண்டு யாழ்ப்பாண இளைஞர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில்  B.A தேர்வு எழுதினர் .அந்த இரண்டு இளைஞர்களும் தேர்வில் வெற்றிபெற்றதால் அதிக மதிப்பெண்கள் பெற்ற C.W.தாமோதரம்பிள்ளை அவர்கள் சென்னைப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியாக அறிவிக்கப்பெற்றார் .



                                                 இரண்டாவது பட்டதாரியான வைரமுத்து விசுவநாதப்பிள்ளையைப்பற்றி அதிகம் தெரியவில்லை .இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து  விசகணிதம் மற்றும் சுப்ரதீபம் போன்ற நூல்களை எழுதியதாகத்  தெரிகிறது .

முதல் பட்டதாரியான திரு .C.W.தாமோதரம்பிள்ளை  பற்றி  மேலும் ........



             திரு .பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பட்டி என்னும் 
கிராமத்தில் 1832ல் பிறந்தார் .அவர் தந்தையார் பெயர் வைரவநாதப்    பிள்ளை .தாயார் பெருந்தேவி அம்மாள் .     யாழ்ப்பாணத்தில் 1852ல் தனது பள்ளிப்படிப்பை முடித்து சிறிது 
காலம் ஆசிரியப்பணி ஆற்றினார் 1853 ல் தனது 20 வது வயதில் நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து தமிழ் அறிஞர்களின் மனதைக் கவர்ந்தார் .தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியானார் .1854ல் சென்னை வந்து தினவர்தமணி 
என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்து, 1857ல் தொடங்கிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி ஆனார் . சென்னை 
மாநிலக்கல்லுரி யில் தமிழ் விரிவுரையாளராகவும் பின்  கோழிக்கோடு கல்லூரியிலும்  பணியாற்றினார் .1871ல் B.Lபட்டம் பெற்று 1884ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் .ஓய்வுக்குப்பின் கும்பகோணத்தில் சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார் .கடைசியாக புதுக்கோட்டை முதன்மை வழக்காடு மன்றத்தில் நீதிபதியாக இருந்து சென்னை வந்தார் .

                                                       பரிதிமால்கலைஞரை அறிமுகம் செய்து அவரது திறமையினை உலகிற்கு தெரிவித்தவர் .தமிழ் இலக்கியங்களைப்
பதிப்பதில் உ .வே .சாமிநாதஅய்யருக்கு முன்னோடியாக இருந்தவர் .
1860ல் திருக்குறளைப் பதிப்பித்தார் .தொல்காப்பியத்தை நச்சினார்க்கினியன் உரையுடன் தொகுத்தார் .இறையனார் அகப்பொருளு க்கு  உரை எழுதினார் .வடமொழி தாக்கத்துடன் புத்தமித்ரர் எழுதிய வீரசோழியம் என்ற இலக்கண நூலை 1881ல் பதிப்பித்தார். அதே ஆண்டு கச்சியப்ப முனிவர் எழுதிய தனிகைப்புரானத்தை தொகுத்தார் .1887ல் கலித்தொகையை பதிப்பித்தார் .இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி ஆங்கில அரசு 1895ல் இவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளித்தது .இவர் சென்னை சுகுணவிலாஸ் சபாவின் ஆரம்பகால ஸ்தாபக உறுப்பினர் .மேலும் இவர் கட்டளைக் கலித்துறை ,சைவ மகத்துவம், சூளாமணி வசனம் மற்றும் நட்சத்திர மாலை போன்ற நூல்களையும் காந்த மலர் அல்லது கற்பின் மாட்சி என்கிற புதினத்தையும் எழுதி தனது செய்யுள் திறமையையும் உரைநடை வளத்தினையும் உலகிற்கு உணர்த்தினார் .தமிழ் தாத்தா உ .வே .சாமிநாத அய்யர் அவர்கள் சீவக சிந்தாமணியை பதிப்பிக்கும் போது தான் பதிப்பிப்பதிற்க்காக வைத்திருந்த   கைப்பிரதியைக் கொடுத்து உதவினார் .மேலும் தனக்கு தெரிந்த பேப்பர் வியாபாரியிடம் சொல்லி அய்யருக்குபொருளாதார ரீதியில் உதவச் சொன்னார் .

          இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல் இது .

                        நீடிய சீர்பெறு தமோதர மன்ன ,நீள்புவியில் 
                        வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புறநீ 
                       பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான் 
                       கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறவரிதே   

            பரிதி மால் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்த்ரி அவர்களின் பாராட்டுரை .

                       காமோதி வண்டர் கடிமலர்ந்தேன் கூட்டுதல்போ 
                       னாமோது செந்தமிழி னனூல் பலதொகுத்த 
                       தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றுவெவர் 
                       தாமோ தரமுடையார் தண்டமிழ்ச் செந்    நாப்புலவீர் 

          1896 ல் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் இயற்றிய லீலாவதி ,சுலோசனை நாடக நூல்களை வெளியிட்டபோது அவற்றிலிருந்து 
ஐம்பது பக்கங்களை சென்னைப் பல்கலைக் கழக  F.A தேர்வுக்கு   பாடமாக வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார் .
          இக்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றை பல்கலைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது இதுவே முதல் முறை என்று முதலியார் அவர்கள் 
'யான் கண்ட புலவர்கள் " என்னும் நூலில் குறிப்பிட்டுஉள்ளார்கள் .          

                                                      தமிழுக்குப்  பெரும் தொண்டு ஆற்றிய இந்த மகனார் 01-01-1901அன்று மறைந்தார் .ஆனால் அவர் தமிழுக்கு செய்த தொண்டு இப்பூவுலகில் சந்திரன் சூரியன் உள்ளவரை மறையாது .
                                                              



        

No comments:

Post a Comment