Wednesday, October 10, 2012

FIRST TAMIL LADY DOCTOR/முதல் தமிழ்ப் பெண் மருத்துவர்

முதல்  தமிழ்ப் பெண் மருத்துவர் :


                                                தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் திருமதி 

S.முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்கள் ஆவார் .இது தவிர மேலும் பல துறைகளில் இவர் முதல் பெண்மணியாக இருந்து அந்தத் துறைகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

.அந்தத்  துறைகள் கீழ்வருமாறு :

தமிழகத்தின் முதல் பெண் மாணவராக புதுக்கோட்டை மன்னர்(ஆண்கள் ) கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் . தமிழகத்தின் முதல் பெண் மாணவராக சென்னை மருத்துவக்கல்லூரியில்1907 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டார் .

1912ல் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையுடன் மருத்துவர் பட்டம் பெற்றார் .

1927ல் முதல் இந்தியப் பெண்ணாக சென்னை மாநில சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பெற்றார் .

1929ல் உலகத்திலேயே முதல் பெண்ணாக சென்னை மாநில மேலவைக்கு துணைத்தலைவராகஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மாநில சமூக நல வாரியத்திற்கு முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார் .

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

முதல் பெண்மணியாக (FIRST ALDER WOMAN) சென்னை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டார் .


                                   இத்தகைய பெருமைகளைப் பெற்ற இந்த அம்மையாரைப் பற்றி மேலும் விரிவாகக் காண்போம் .

               புதுக்கோட்டைக்கருகில் திருக்கோகர்ணம்  கிராமத்தில் நாராயணசாமி (அய்யர் )அவர்களுக்கும் சந்த்ராம்மா (தேவதாசி /இசை வேளாளர் )அவர்களுக்கும் 30.07.1886 அன்று முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் பிறந்தார்கள் .நாராயணசாமி அய்யர் புதுக்கோட்டை மன்னர் கல்லுரியில்முதல்வராக இருந்தார் அந்நாளில் இவர்களது திருமணம் மிகவும் விவாதத்திற்கு உள்ளானது . .அவருடன் உடன் பிறந்தவர்கள் மூவர் .மூவரில் ஒரு சகோதரி  திருமதி .நல்லமுத்து . பின்னாளில் சென்னை இராணிமேரி கல்லூரியின் முதல் இந்தியப்பெண் முதல்வராக இருந்து பெருமை சேர்த்தவர்.மற்றொரு தங்கை சுந்தரம்பாள் .தம்பி இராமையா .தங்கை சுந்தரம்பாள் இளவயதில் புற்றுநோய்(rectal cancer) காரணமாக இறந்தார் . அந்த நாளில் புற்றுநோயைப் பற்றி அதிக விழிப்புணர்வு இல்லாததால் சரியான சிகிட்சை தர முடியவில்லை .வயிற்றுப்போக்குக்கான சிகிட்சை அளித்ததனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை .இந்த  சம்பவம் தான் பின்னாளில் புற்றுநோய் மருத்துவமனை அமைய காரணமாக இருந்தது 
                                  முத்துலட்சுமி தனது பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் தொடங்கினார் .13 வயது வரை பள்ளி சென்று படித்தார் .பூப்பெய்தவுடன் அன்று இருந்த வழக்கப்படி பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது .ஆனால் அவருடைய ஆசிரியர்களின் வேண்டுகோளின் படி வீட்டில் இருந்தே படிப்பு தொடர்ந்தது .படிப்பில் மிகவும் கெட்டிக்காரராகப் படித்தார் . பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார் . இதற்குள் அவர் தந்தை ஓய்வு பெற்றார் .குடும்பபொருளாதார  சூழ்நிலை காரணமாக முத்துலட்சுமியை வெளியூர்க்கு அனுப்பி பெண்கள் கல்லூரியில் சேர்க்க முடியாத நிலை .எனவே உள்ளூர் மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்யப்பட்டது .அப்போதைய கல்லூரி முதல்வர் அனுமதி தர மறுத்து விட்டார் .கூறப்பட்ட  காரணங்கள் :

            1.முத்துலட்சுமியை கல்லூரியில் அனுமதித்தால் மற்ற ஆண் 

மாணவர்களை demoralise செய்து விடுவார் .

           2.மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் .

          3.ஆண்கள் கல்லூரியில் பெண்களை அனுமதிக்க முடியாது .

          4.முத்துலட்சுமியின் குடும்ப பாரம்பரியம் .

                   ஆனால் மன்னர் கல்லூரியின் தாளாளர் புதுக்கோட்டை மன்னர் உத்தரவின்படி முத்துலட்சுமிக்கு கல்லூரியில் படிக்க அனுமதி தரப்பட்டது .பட்டப்படிப்பு தொடங்கியது மன்னரின் உதவித்தொகையுடன் .

கல்லூரியில் அவருடன் படித்த மற்றுமொரு முக்கியமான  நபர் சத்யமுர்த்தி அய்யர் .பட்டப்படிப்பு முடிந்தவுடன் முத்துலட்சுமியை  அவர் தந்தை ஆசிரியராக்க விரும்பினார் .ஆனால் முத்துலட்சுமியோ மேற்கொண்டு படிக்க விரும்பினார் .மேலும் அவரது குடும்ப நண்பர்கள் அவரை மருத்துவக்கல்லூரியில் சேர ஊக்குவித்தார்கள் .முத்துலட்சுமி தாயாருக்கு அதில் துளியும் விருப்பமில்லை .அவர்களுக்கு மகளுக்கு 

திருமணம் செய்வதில் விருப்பமாக இருந்தது .ஆனால் எல்லாவற்றையும் மீறி நாராயணசாமி அய்யர் மகளை அழைத்துக்கொண்டு சென்னை வந்து சென்னை மருத்துவகல்லூரியில் 1907ஆம் ஆண்டு சேர்த்தார் .

முத்துலட்சுமி கடுமையாகப் படித்தார் .உடல் நலம் மற்றும் கண் பார்வை
பாதிக்கப்பட்டது .ஆனாலும் எடுத்த முயற்சியில் தீவிரம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெற்றார் .அறுவைசிகித்சை பாடத்தில் 100%மதிப்பெண்கள் பெற்றார் .1912ல் முதல் தமிழ்ப்பெண்ணாக மருத்துவப் பட்டம் பெற்றார் .


                                      கல்லூரி நாட்களில் பெண்களுக்காக நடத்தப்படும் 

மாநாடு பலவற்றிற்கு அவர் சென்று வருவார் .அதன் பயனாக கவிக்குயில் 

சரோஜினி நாயுடு அவர்களின் நட்பு கிடைத்தது .அவரின் மூலமாக 

அன்னிபெசன்ட் அம்மையாரின் தொடர்பு உண்டாயிற்று .சமூகசேவை 

மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட அவருக்கு உத்வேகம் 

கொடுத்தவர்கள் அண்ணல் மகாத்மா அவர்களும் அன்னிபெசன்ட் 

அம்மையார் அவர்களும் ஆவார்கள் .


                                                          முத்துலட்சுமிக்கு திருமணம் செய்ய அவர் 

பெற்றோர்கள் முயற்ச்சித்தனர் .ஆனால் முத்துலட்சுமிக்கு அதில் அதிக 

ஆர்வம் இல்லை .அவருக்கு பெண்கள் நலம் ,முன்னேற்றம் மற்றும் 

அநாதை குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தல் ஆகிய வற்றில் ஈடுபாடு 

அதிகமாக இருந்தது .ஆனாலும் பெற்றோர்களுக்காகவும் உடன் 

பிறந்தவர்களுக்காகவும் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார் 

திரு DR. T.சுந்தர ரெட்டி அவர்களை ஏப்ரல் 1914ஆம் ஆண்டு ,

அன்னிபெசன்ட் அம்மையார் அவர்களால் நிறுவப்பட்ட பிரமஞான சபை 

திருமண முறைப்படி (மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சடங்குகளை 

தவிர்த்து UNDER NATIVE MARRIAGE ACT 1872,) திருமணம் செய்து 

கொண்டார் .DR.T.சுந்தரரெட்டி அவர்கள் F R C S பட்டம் பெற்ற முதல் 

இந்தியராவார் .தம்பதிகள் இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர் .

வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருந்தது .அதன் பயனாய் இரு ஆண்மக்களைப் 

பெற்றனர்.முதல் குழந்தை ராம்மோகனுக்கு பிரசவம் பார்த்தவர் பிரபல 

மகப்பேறு மருத்துவர் DR.A.L.முதலியார் அவர்கள் ஆவார் .இரண்டாவது 

மகன் கிருஷ்ணமுர்த்தி .

                                             மேல் படிப்பிற்காக அரசாங்க உதவித்தொகையுடன் 

இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது .குழந்தைகள் மற்றும் 

கணவருடன் இங்கிலாந்து சென்றார் .உயர் கல்வியைப் பெற்றார் .

சென்னை திரும்பி வந்து மருத்துவப் பணியில் ஈடுபட்டார் .பின் 

இந்தியப் பெண்கள் சங்கம் கேட்டுக்கொண்டதிற்கு இணங்கி பெண்களின் 

முன்னேற்றத்திற்க்காகவும் சமூகசேவைக்காகவும் தன்னை அர்ப்பணித்து 

பணம்  கொழிக்கும் மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார் .1926ஆம் 

ஆண்டுபிரான்ஸ் ல் நடந்த  உலகப் பெண்கள் மாநாட்டில் இந்திய 

திருநாட்டின் சார்பாக கலந்து கொண்டார்கள் .

                                                1926ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் மேலவை 

உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .ஒரு இந்தியப்பெண் இந்தியாவில் 

 மேலவை உறுப்பினராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும் .

மீண்டும் 1927ஆம் ஆண்டு அவர் மேலவையின் துணைத்தலைவராக 

ஒருமனதாக தேர்ந்தெடுக்ப்பட்டார் .அவ்வாறு தேர்ந்தெடுக்ப்பட்ட உலகின் 

முதல் பெண்மணி இவர் ஆவார் .இந்த காலகட்டத்தில்தான் அவர் பல 

செயற்கரிய செயல்களை செய்தார் 

                                          பால்ய விவாக சட்டம் ,இருதார தடைச் சட்டம் 

 ,பெண்கள் சொத்துரிமை சட்டம்மற்றும் தேவதாசி ஒழிப்பு சட்டம் 

ஆகியவை முக்கியமானதாகும் .தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்க்கு 

காங்கிரசில் பலத்த எதிர்ப்பு .தேவதாசி முறை நீண்ட காலமாக இந்திய 

நாட்டில் இருந்து வருகிறது.அது  நமது  இந்து கலாச்சாரத்தின் 

.அடையாளம் .அந்த முறை நாட்டிற்கு அவசியம் என்றெல்லாம் வீர 

வசனம் பேசினார் சத்யமுர்த்தி அய்யர் .அவருக்கு ஆதரவாக ராஜாஜியும் 

செயல் பட்டார் .அப்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 

"நீங்கள் சொல்வது சரி .இதுவரை இந்த கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக 

எங்கள் வீட்டுப் பெண்கள் இதனை செய்து வந்தார்கள் .இனிமேல் 


உங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி இந்த கலாச்சாரத்தை பாதுகாத்து 


கொள்ளுங்கள் "என்று கூறியவுடன் அய்யர் தலை குனிந்தார் .


மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.ஆனால் இந்த மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கும் சட்டம் ஆகாமல் இருப்பதற்கும் பல வித உத்திகளை திரை  மறைவில்  கையாண்டார் சத்தியமுர்த்தி அய்யர் . .ஆனால் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அவர்கள் 

அண்ணல் மகாத்மா காந்தி மற்றும் பெரியார் ஈ .வே .இராமசாமி 

அவர்கள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்றினர் .1929 ல் நிறைவேறிய 

இந்த மசோதா 1947ல் தான் சட்டமாயிற்று .இந்த காலதாமதத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சத்தியமுர்த்தி அய்யர் .இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் தேவதாசி ஒழிப்புச்  சட்டம் கொண்டு வரப்பட்டது .

                               1929ல் அண்ணல் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதை 

முன்னிட்டு டாக்டர் அவர்கள் தனது மேலவை உறுப்பினர் பதவியை 

ராஜினாமா செய்தார் .அன்றிலிருந்து தனது உடல் பொருள் ஆவி 

அனைத்தயும் பாவப்பட்ட பெண்களுக்காகவும் அனாதை குழந்தைகளுக் -

-காகவும்  தியாகம் செய்ய முனைந்தார் .ஆதரவற்ற பெண்களுக்காக 

''அவ்வை இல்லத்தை" 1930ல் வேப்பேரியில் நாமக்கல்லைச் சேர்ந்த 

தேவதாசி குலத்திலிருந்து வந்த மூன்று பெண்களுடன் ஆரம்பிக்கப் -

பட்டது .அந்த மூன்று பெண்களுக்கும் படிப்பதற்கு வசதி செய்யப்பட்டது .

அந்த மூவரில் ஒருவர் ஆசிரியராகவும் ,மற்றொருவர் மருத்துவராகவும் ,

இன்னுமொருவர் செவிலியராகவும் படித்தார்கள் .பின் அவ்வை இல்லம் 

வேப்பேரியிலிருந்து மயிலாப்பூருக்கும் பின் அடையாறுக்கும் மாற்றப்பட்-

டது .திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு சொந்தமான 22 கிரவுண்டு 

இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இல்லம் நிரந்தரமாக செயல் படத் 

தொடங்கியது .சிறு குற்றம் சுமத்தப்பட்ட சிறுவர்களுக்கும்  அனாதை 

குழந்தைகளுக்கு ம் ஆதரவற்ற பெண்களுக்கும்  இல்லம் புகலிட -

-மாயிற்று .1950 ல் சிறுவர் சிறுமியர்களுக்காக ஆரம்ப பள்ளி ஒன்று அங்கு 

தொடங்கப்பட்டது .தமிழக அரசு உதவியுடன் பள்ளி நடை பெற்று -

வருகிறது .1952 ல் இல்லப் பெண்களுக்காக ஆசிரியர் பயிற்சி பள்ளி 

ஒன்றை ஆரம்பித்தார் .ஆதரவற்ற பெண்களுக்கும் அனாதை குழந்தை -

-களுக்கும் இன்று வரை அவ்வை இல்லமே புகலிடமாக இருந்து 

வருகிறது .அம்மையாரின் கணவர் டாக்டர் சுந்தர ரெட்டி அவர்கள் 

தனது இறுதி நாள் வரை இல்லத்தை நிர்வகித்துவந்தார். 1943ஆம் ஆண்டு 

டாக்டர் சுந்தர ரெட்டி அவர்கள் மறைந்தார் .ரெட்டியாரின் மறைவு 

அம்மையாருக்கு மிகுந்த கலக்கத்தைக் கொடுத்தது .ஆனால் அம்மையார் 

அந்த துயரத்திலிருந்து மீண்டு மீண்டும் தனது சமூக சேவையை 

தொடர்ந்தார் .

                                  அம்மையாரின் தங்கை சுந்தரம்பாள் புற்றுநோய்க்கு 

சரியான மருத்துவ சிகிட்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையில்லாமல் 

அவர் இறந்தது அம்மையாருக்கு பெரிய குறையாக /வருத்தமாக 

இருந்தது .1935 ல்  நடந்த சென்னை மருத்துவக்  கல்லூரி நூற்றாண்டு 

விழாவில் அம்மையார் பேசும் போது சிறப்பு புற்று நோய் மருத்துவமனை -

யின் அவசியத்தினை எடுத்துரைத்தார் .மருத்துவமனை கட்டுவதற்காக 

நிதி ஒன்றினை தொடங்கினார் .1935 ல் கண்ட கனவு 1952 ல் நிறைவேறத் 

தொடங்கியது .1952 அக்டோபர் திங்களில்  அப்போதைய பிரதமர் திரு 

.ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது .ஜூன்திங்கள் 

1954 ஆம் வருடம் தென்இந்தியாவின் முதல் புற்று நோய் சிறப்புமருத்துவ -

மனை 12 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது .அம்மையாரின் 

சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1956 ல் அவருக்கு பத்மபூஷன் விருது 

வழங்கியது .

                                    சிறந்த சமூகசேவகியும் புகழ் பெற்ற மருத்துவரும் 

பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமும் ஆன டாக்டர் 

முத்துலட்சுமிரெட்டி அவர்கள் 22.07.1968 அன்று  தனது 82 வது வயதில் 

மறைந்தார் .அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய தொண்டு இந்திய 

சரித்திரத்தில் என்றென்றும் மறையாது நிற்கும் . அவ்வை இல்லமும்,

 அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும் அவரது சேவையினை 

உலகிற்குச்  சொல்லிக் கொண்டிருக்கும் .அம்மையார் புகழ் ஓங்குக .


                                        டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 

















No comments:

Post a Comment