Saturday, November 17, 2012

17ஆம் நூற்றாண்டின் தமிழகம் குறித்து ஒரு புத்தகம்

17ஆம் நூற்றாண்டின் தமிழகம் குறித்து ஒரு

புத்தகம் 

                                                  வடமொழியில்  ஜேஷ்டாதேவி என்றும் தமிழில் மூத்ததேவி என்றும் மூதேவி என்றும் சொல்லப்படுகின்ற ஒரு தெய்வத்தைப் பற்றிய  தகல்வல்களை  திரட்டிக் கொண்டிருக்கும் போது என் பார்வையில் ஒரு புத்தகம் பட்டது .அது பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட புத்தகமாகும்.அப்புத்தகம் 1782 ல் பாரிஸ் நகரத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 


அந்தப்  புத்தகத்தின் ஆசிரியர் பிரரே சொன்னேராத் ஆவார்.1769 ல் பிரெஞ்சு மன்னர் கட்டளையின்படி கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா,சீனா,ஸ்ரீலங்கா,இந்தோனேஷியா, மாலத்தீவுகள்

  மொரிசியஸ்,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்று அந்த நாடுகளின் கலாச்சாரம் ,மொழி,மதம் பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள்,சமூகக்  கோட்பாடுகள் பற்றி அறிந்து வர ஆசிரியர்   பிரரே சொன்னேராத் பயணம் மேற்கொண்டார்.இவர் ஒரு இயற்கைவாதி,ஆராய்ச்ச்சியாளர் மற்றும் ஒரு பறவை நிபுணருமாவார்.
இவருடைய காலம் கி .பி 1748--1814. இவர் தனது பிரயாணத்தின்   அனுபவங்களையும் அந்நாட்டு  மக்களிடம் பழகி அவர்களுடைய மதம், மொழி மற்றும் அவர்களுடைய சமூக பழக்கவழக்கங்களைப்பற்றி  விரிவாக எழுதி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

 முதல் தொகுதியில் இந்தியாவைப் பற்றி முக்கியமாக தமிழகத்தைப் பற்றி மிகவும் விரிவாக எழுதியுள்ளார் . தமிழ் மொழியைப் பற்றியும் அதன் எழுத்து சொல் மற்றும் இலக்கணம் குறித்தும்  கையாண்டுள்ளார்.மேலும் தமிழர்களின் திருமணம் ,திருமணத்தில் கையாளப்படும்  நடைமுறைகள் மற்றும் அந்தக்காலத்தில் இருந்த மருத்துவம், பணமாற்றம், சாதிப்பிரிவுகள் ,இசை ,இசைக்கருவிகள் , மத நம்பிக்கை,கடவுள் வழிபாடு(தீ மிதி விழா )  மற்றும் கடவுளர்கள் பற்றி  எழுதியுள்ளார். மேலும் பல கடவுளர்களின் காணக்கிடைக்காத ஓவியங்களும்,தொழிலாளர்களின் ஓவியங்களும் பலதரப்பட்ட மக்களின் ஓவியங்களும் மற்றும் சில கோவில்களின் ஓவியங்களும் மிகவும்  பிரமிக்கத்தக்கதாக உள்ளன.இதுவரையில்  எங்கும் பார்க்காத,காணக்  கிடைக்காத மூத்ததேவியின் ஓவியம் ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது.  இது ஒரு அரிய ஓவியமாகும்.


 அவர்  அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த  தமிழர்களின் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் நுணுக்கமாக கவனித்து எழுதியுள்ளார்.உதாரணத்திற்கு ஒன்றை சொல்லவேண்டும் என்றால் தமிழர்களின் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு பணம்  கொடுக்கவேண்டும் .அந்த நிகழ்ச்சியை  பரியம் போடுதல் என்று அழைப்பர். அந்தப் பணத்திற்கு பரியப் பணம் என்று பெயர். பரியப்பணம் மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கேற்ப பெண் வீட்டார்க்கு கொடுக்கப்படும்.பரியம் போடுதல் என்பது தமிழரின் திருமணத்தில் நடைபெறும் பல நிகழ்சிகளில் இதுவும் ஒன்று.இதைப் பற்றிக்கூட திரு.  சொன்னேராத் அவர்கள் தனது புத்தகத்தில் மிக விரிவாக கூறியுள்ளார்கள்.தமிழர்கள் கொண்டாடும் விழாக்களைப் பற்றி குறிப்பிடுகையில் பொங்கல் விழாவைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ள அவர் தற்போது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளியைப் பற்றி எங்கேயும் குறிப்பிடாததைப் பார்க்கையில் அந்த நாட்களில் தீபாவளி என்ற பண்டிகையே தமிழ்நாட்டில் இல்லையென்று தெரிகிறது.பிற்காலத்தில் அது  தமிழ்நாட்டில் புகுந்திருக்கக் கூடும் என்று கருத இடமுண்டு  .இரண்டாம் தொகுதியில் சீனா மற்றும் கிழக்கிந்திய நாடுகளைப் பற்றி  எழுதியுள்ளார்.



                                                      தமிழ் தாத்தா உ .வே .சாமிநாத அய்யருக்கு ஒரு காவியத்தின் எல்லாப் பாடல்களும் அடங்கிய ஒரு ஏட்டுச்சுவடி கிடைத்திருந்தால்  எந்த அளவு மகிழ்ச்சி கொண்டிருந்திருப்பாரோ  அந்த அளவிற்கு இந்த புத்தகத்தைக் கண்டவுடன் நான் மகிழ்வு கொண்டேன்.பதினேழாம் நூற்றாண்டின் தமிழகத்தைப் பற்றி, தமிழர்களைப் பற்றி ,அவர்களின் சாதி சமயக் கோட்பாடுகள் பற்றி ,அவர்கள் மொழியைப்பற்றி,நாணயங்களைப் பற்றி மற்றும் அவர்களின் தொழில் ,கடவுளர்களைப் பற்றி வேறு எந்த ஒரு புத்தகமும் இவ்வளவு விரிவாகக்  கூறியதில்லை.மெகஸ்தனிஸ் மற்றும் யுவான்சுவாங் கூட இந்த அளவிற்கு தமிழகத்தைப் பற்றி, தமிழைப் பற்றி, தமிழர்களைப் பற்றி, அவர்கள் கலாச்சாரத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதாகத் தெரியவில்லை.அவ்வளவு சிறப்புடைய இப்புத்தகத்தின் ஒரே குறைபாடு அது ஆங்கிலத்தில் இல்லாமல் பிரெஞ்சு மொழியில் உள்ளதுதான்.அதைக்கூட அப்புத்தகத்தின் குறை என்று சொல்லமுடியாது.நமக்கு பிரெஞ்சு மொழி தெரியாத குறைதான் என்று சொல்லவேண்டும்.எனக்கும் அந்த அளவிற்கு பிரெஞ்சு மொழிதெரியாத காரணத்தினால்  பிரெஞ்சு தெரிந்த ஒரு நண்பரின் உதவி கொண்டுபடித்து கேட்டு மகிழ்ந்தேன்.நண்பருக்கு தமிழ் நன்கு  தெரியாததால் புத்தகத்தில் தமிழைப் பற்றி உள்ள விளக்கங்களுக்கு அவரால் சரியான மொழிபெயர்ப்பு தர முடியவில்லைஎன்பதே குறை .இப்புத்தகத்திற்கு ஆங்கில மொழியாக்கமோ தமிழ் மொழியாக்கமோ இல்லை என்று தெரிகிறது.



இப்புத்தகத்தைப்போல இன்னும் ஏராளமான புத்தகங்கள் இங்கிலாந்த் நூலகத்திலும் அமெரிக்கப்  பல்கலைக்கழகங்களான கலிபோர்னியா ,சிகாகோ ,ஸ்டான்போர்ட் மற்றும் பல நூலகங்களில், "சிதம்பரத்தில் பூட்டிவைக்கப்பட்ட திருமறைகள் போல்,"கேட்பாரற்று கிடக்கின்றன.அன்று ஒரு மாமன்னன்  ராஜராஜன் வந்து திருமறையை மீட்டது போல்,  நல்ல ஒரு தமிழறிஞரோ  அல்லது பல தமிழறிஞர்களோ  இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச்  சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பிற மொழிகளில் உள்ள, நமக்கு, தமிழுக்கு ,தமிழகத்திற்கு தேவைப்படும் புத்தகங்களை தமிழாக்கம் செய்ய வேண்டும்.தனிப்பட்ட நபர்கள் இந்த மாபெரும் காரியத்தை செய்ய முடியாத பட்சத்தில் தமிழ் பல்கலைக்கழகமும் தமிழக அரசும் ஒருங்கிணைந்து இப்பணியைச் செய்யவேண்டும்.அவ்வாறு செய்யும் பட்சத்தில் அனுப்பப்படும் நபர்கள் உண்மையான  தமிழறிஞர்களாகவும், தமிழில் ஆர்வம் உள்ளவர்களாகவும், தமிழுக்கு தொண்டு செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாகவும்  இருப்பது மிகவும் அவசியமாகும்.ஏனெனில் தமிழில் பேசத் தெரிந்த சிலர் தங்களை தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்கா,இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு அங்கேயுள்ள தமிழ்ச் சங்கங்கள்  மற்றும் அறக்கட்டளைகளின் அழைப்பின் பேரில்(அங்குள்ள உறவினர் மற்றும் நண்பர்களின் சிபாரிசில் ) குடும்பத்துடன் சென்று அங்கு பத்துப் பதினைந்து நாட்கள் தங்கி சுற்றுலா இடங்களைப் பார்த்து விட்டு  தங்கும்  நகரங்களில்   பட்டிமன்றங்களில் நகைச்சுவையாகப்பேசி அவர்கள் தரும்  அன்பளிப்புகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு கூடவே, அங்கு அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காக , அங்குள்ள சங்கங்கள் அளிக்கும் "தமிழ்க் கடல் "தமிழ்ப் புயல் "தமிழ் இமயம் "தமிழ் சிகரம் " போன்ற பட்டங்களையும் பெற்றுக்கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக அயல்நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்து வீடு திரும்பி சங்கங்கள் கொடுத்த பரிசுகளையும் அன்பளிப்புகளையும் பார்த்து மகிழ்வதுதான் அந்தத்" தமிழறிஞர்கள்" ஆற்றும் தமிழ்ப்பணி.அவர்கள் அயல்நாட்டில் தங்கியிருக்கும்போது ஒருநாள் கூட ஒரு  பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்குள்ள நூலகத்திற்கோ அல்லது தமிழ்த்துறைக்கோ சென்றதாக செய்தியுமில்லை .சரித்திரமுமில்லை.மேலும் அயல்நாட்டிலுள்ள தமிழ் சங்ககங்களும் அறக்கட்டளைகளும் தமிழகத்திலிருந்து அகன்றதிரை தாரகைகளையும் சின்னத்திரை தாரகைகளையும் அழைத்து வந்து அங்குள்ள தமிழ்மக்களை மகிழ்விப்பதில்தான் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றனவே தவிர  அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் பிற  மொழிகளில்  தமிழைச் சொல்லும்  ,தமிழனைப் பேசும்  ,தமிழகத்தை விவரிக்கும் புத்தகங்களை மொழி மாற்றம் செய்வதில் அக்கறை காட்டுவதில்லை.அவர்களுக்குள்ள முக்கியமான பிரச்சினையே  இந்த வருட ஆண்டு விழாவை எந்த பிரபல  நடிகையை முன்  வைத்து நடத்தலாம் என்பதே .இது நிற்க .



                              மேலே கூறிய காரணங்களினால்  இந்த புத்தகத்தின் முழு சாராம்சத்தையும் என்னால் உங்களுக்கு  அளிக்க  முடியவில்லை.அதனால் நான் கண்டு  ரசித்த  அந்தப் புத்தகத்தில் உள்ள ஓவியங்களையும் தமிழர்களின் சிறப்புகளை விவரிக்கும் பக்கங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அழகானவை .அரியவை. அவைகள் அந்தக்காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளன. அவைகள்  உங்கள் பார்வைக்கு .










No comments:

Post a Comment